ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது: டாக்டர் ராமதாஸ்

ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது: டாக்டர் ராமதாஸ்

ஒரு வார கால ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரண்டு நாள் தளர்வு தகர்த்து விட்டது என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து பொதுமக்களின் வசதிக்காக நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்களின் கூட்டம் சாலைகளில் அதிகரித்து உள்ளது. இது குறித்து மருத்துவ வல்லுனர்கள் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே தங்களது கவலையை தெரிவித்த நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது நல்ல முடிவு. சென்னையிலிருந்தும், பிற நகரங்களிலிருந்தும் 4500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதும், வழக்கமான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டதும் தேவையற்றவை. இவை தமிழகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்து விடும்.

தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்ப்பதற்காகவே கடுமையான ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது! ஆனால், தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒரு வாரத்தில் படிப்படியாக பரவ வேண்டிய கொரோனாவை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பரவச் செய்வதற்கான ஏற்பாடு தான். ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது என்பதே உண்மை’ என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com