’தேர்ச்சி’ என்று மட்டும் குறிப்பிடும் மதிப்பெண் சான்றிதழ்: அன்புமணி எதிர்ப்பு!

’தேர்ச்சி’ என்று மட்டும் குறிப்பிடும் மதிப்பெண் சான்றிதழ்: அன்புமணி எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ’தேர்ச்சி’ என்று மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த மாதிரியை மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 5 பாடங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மதிப்பெண்கள் என்று குறிப்பிடாமல் மொத்தமாக தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடுவதற்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணும் குறிப்பிடப்படாது என்றும், தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மை என்றால் அரசின் முடிவு மிகவும் தவறானது!

மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால், பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு, பின்னாளில் பத்தாம் வகுப்பை கல்வித் தகுதியாக கொண்ட அரசு பணிகளுக்கு செல்வதிலும், மேல்நிலை வகுப்புகளில் சேர்வதிலும் சிக்கல் ஏற்படக்கூடும்!

கொரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட கடந்த ஆண்டு கூட சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மதிப்பெண்கள் வழங்கப்படாவிட்டால், அதுவே மாணவர்களையும், அவர்களின் கல்வித்திறனையும் சிறுமைப்படுத்தும் செயலாகிவிடும்

2020-21 கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தது 3 அல்லது 4 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆணையிட வேண்டும்!

இவ்வாறு டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com