இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா… அடுத்து அரங்கேறப்போகும் அரசியல் காட்சிகள்

இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா… அடுத்து அரங்கேறப்போகும் அரசியல் காட்சிகள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, இன்று பெங்களூரு தனியார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி வரும் நாட்களில் அவர் எடுக்கப் போகும் அரசியல் முடிவுகளால் அதிமுகவில் அதிர்வுகள் இருக்கும் எனப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, கடும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிறைத் துறையினரால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்கிற சோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தது. அதே நேரத்தில் அவர் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார்.

இதைத் தொடர்ந்து 21 ஆம் தேதி, பெங்களூருவில் உள்ள விக்டோரியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சசிகலா. அங்கு அவருக்கு மீண்டும் கொரோனா டெஸ்டிங் மற்றும் சி.டி.ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. இதையனுத்து ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு செயற்கையாக ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வார காலத்தில் அவர், சிறையிலிருந்து விடுதலையாவதற்கான ஆணையும் வந்தது. அந்த நேரத்தில் உடல் நல முன்னேற்றமும் கண்டார் சசிகலா.

கடந்த மூன்று நாட்களாக செயற்கை ஆக்ஸிஜன் இல்லாமல் சுவாசிக்கும் சசிகலா, தனியாக தன் வேலைகளைச் செய்யும் அளவுக்கு முன்னேறினார். இதனால் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். சில நாட்களுக்கு அவர் வீட்டுத் தனிமையில் இருப்பார் எனத் தெரிகிறது.

அதே நேரத்தில் பிப்ரவரி முதல் வாரம், சசிகலா தமிழகத்துக்குத் திரும்ப உள்ளார் என்று அவருக்கு நெரிங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அப்போது அவரது ஆதரவாளர்கள், சசிகலாவுக்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.

அதிமுகவில் இருக்கும் சசிகலா ஆதரவாளர்கள் சிலர், அவரின் வருகையை முன்னிட்டு போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். அவர்களைக் கண்டித்து கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி வருகிறது எடப்பாடி தரப்பு. அதே நேரத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து சொல்லும் அதிமுகவின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது அதிமுக தலைமை. சமீப காலமாக அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் கோகுல இந்திரா, அன்வர் ராஜா, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் சசிகலாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

சசிகலாவின் நெருக்கமானவரான அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 'அமமுக என்பது அதிமுகவை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. சீக்கிரமே பல விஷயங்களை நீங்கள் பார்ப்பீர்கள்' என்று சூசகமான கருத்தைக் கூறியுள்ளார்.

இதனால் சசிகலா தமிழகம் வந்ததும் ஒரு அரசியல் களேபரம் நடக்க உள்ளது தின்னமாக தெரிகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com