கொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..?- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை

கொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..?- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி கோவிஷீல்ட் வழங்கப்படலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசி தயார் செய்துள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியை விற்பனை செய்வதற்கென விலைப் பட்டியலையும் அறிவித்துவிட்டது. இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஒரு தடுப்பூசி 150 ரூபாய்க்கும் மாநில அரசுகளுக்கு ஒரு ஊசி 400 ரூபாய்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு ஊசி 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாநில அரசு மக்களுக்குத் தருவதை விட மத்திய அரசின் மருத்துவமனைகளிலும் மையங்களிலும் மக்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி குறைந்த விலைக்குக் கிடைக்கும். வெளிநாடுகளில் கொடுக்கப்படும் தடுப்பூசிகளை விட மிகவும் குறைந்த விலையில் இந்தியாவுக்கான தடுப்பூசி உள்ளது என சீரம் நிறுவனம் கூறுகிறது.

அரசு விதிமுறைகளின் அடிப்படையில் சீரம் நிறுவனம் வழங்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்காக ஒதுக்கப்படும். மீதம் இருக்கும் 50 சதவிகிதம் மாநில அரசுகளுக்கும் தனியார் மையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி விலைகளை குறைவாக மற்றும் சீராக வைத்திருக்க முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 'மத்திய அரசின் தடுப்பூசிக்குப் பல விலைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பது பாகுபாடானது, பிற்போக்குத்தனமானது. மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து இந்த முடிவைப் புறக்கணிக்க வேண்டும்.

மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து விலை பேச்சுவார்த்தைக் குழுவை ஏற்படுத்தி முன்னெடுப்பதுதான் சிறந்த வழி. இந்தப் பேச்சுவார்த்தைக் குழு 2 மருந்து நிறுவனங்களுடன் பேசி நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே மாதிரியான விலை வைக்கப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரே மாதிரியான விலை வைக்க மருந்து உற்பத்தியாளர்களுக்கு மாநில அரசுகள் சேர்ந்து வலியுறுத்த வேண்டும்.

மாநில அரசுகள் அனைத்தும் இதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசு தனது பொறுப்புகளில் இருந்து தவறி, கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்ட சரணடைந்துவிட்டது' எனத் தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com