மகாராஷ்டிரா, டெல்லியில் தளர்வுகள் அறிவிக்க முடிவு. ஆனால் தமிழகத்தில்...?

மகாராஷ்டிரா, டெல்லியில் தளர்வுகள் அறிவிக்க முடிவு. ஆனால் தமிழகத்தில்...?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பில் மிக மோசமான நிலையில் இருந்த மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்களில் தற்போது பாதிப்பு குறைந்துள்ளது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் தளர்வுகளை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்த தமிழகத்தில் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் மற்றும் அம்மாநில மக்கள் கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாக தற்போது 30 ஆயிரத்திற்கும் குறைவாகவே அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதனை அடுத்து ஜூன் 1-ஆம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

அதேபோல் டெல்லியிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், மேலும் பல சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கவும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் நிலையோ நேர்மாறாக உள்ளது. தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் மே 31-ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைய வில்லை என்றால் இதே நிலை நீடிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com