விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து: 22 வயது பெண்ணை கைது செய்த மத்திய அரசு!

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து: 22 வயது பெண்ணை கைது செய்த மத்திய அரசு!

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த, பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியை, டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. இது தேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தை பெருந்திரளான விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு சுவீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், கிரெட்டா துன்பெர்க், சில நாட்களுக்கு முன்னர் ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர், இந்தப் போராட்டத்துக்கு ஆன்லைனில் ஆதரவு திரட்ட விரும்புவோர், அதை எப்படிச் செய்யலாம் என்பது குறித்த 'டூல்கிட்' ஒன்றையும் ட்வீட் செய்திருந்தார். அதைப் பயன்படுத்தி விவசாயிகள் போராட்டத்துக்கு அதிக ஆதரவு திரட்ட முடியும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் திஷா ரவி, இந்த 'டூல்கிட்' உருவாக்கத்தில் பங்காற்றியவர் என்று குற்றம் சாட்டி டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. முன்னதாக துன்பெர்க் மீது டெல்லி போலீஸ் இந்த விவகாரத்துக்காக வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் தான், திஷா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திஷா, டெல்லி நீதிமன்றத்தில் போலீஸால் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பு, 'டூல்கிட் டாகுமென்ட்டை எடிட் செய்தது திஷா தான். அதை பொதுத் தளத்தில் பரப்பியதும் அவர் தான். இவர் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக செயல்பட திட்டமிட்டுள்ளார்' என்று தெரிவித்தது.

வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான திஷா, 'நான் டூல்கிட் டாகுமென்ட்டை உருவாக்கவில்லை. நான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு மட்டுமே கொடுத்தேன்' என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவரை 5 நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

22 வயது செயற்பாட்டாளர் திஷா மீது டெல்லி போலீஸ், 'தேசத் துரோக' வழக்குப் பதிவு செய்ய முயலும் நிலையில், அதற்கு நாட்டின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளன. டெல்லி போலீஸ், மத்திய அரசின் கீழ் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், இந்த விவகாரம் பற்றி, 'இது மிக கொடூரமான செயல். திஷா ரவியை மிரட்டவே இப்படியான வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவருக்கு என் முழு ஆதரவு' என்றுள்ளார்.

அதேபோல சிவ சேனாவின் பிரியங்கா சதூர்வேதி, 'ஒரு டூல்கிட் ஆவணத்தைப் பகிர்ந்ததற்காக 21 வயது மதிக்கத்தக்க பெண் மீது மிக சீரியஸான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை, ஒரு ஆவணத்தை சர்வதேச பிரபலம் ஒருவர் ஆன்லைனில் பகிர்ந்தால், அதனால் தேசம் பிளவுபடும் என்று எண்ணுகிறது. நம் தேசம் மிக வலுவானது என்று அவர்களுக்குத் தெரியவில்லை' என்றுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com