தமிழ்நாடு
செந்தில் பாலாஜிக்கு பின் திமுகவில் இணையப்போகும் தங்க தமிழ்ச்செல்வன்: செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி!

அமமுகவில் முக்கிய தலைவராக இருந்த செந்தில் பாலாஜி சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைய உள்ளதாக அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக ஆட்சியை கலைக்க திமுகவுடன் இணைவோம் என கூறி அரசியல் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார். இதனையடுத்து அதிமுக அமைச்சர்கள் முக்கிய தலைவர்கள் அமமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கூட்டணி உள்ளது தங்க தமிழ்ச்செல்வன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், ஜானகி ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது? ஜானகி ஆட்சியில் நல்லவர்கள் இல்லை என்பதாலும், ஜெயலலிதா நல்லவர் என்பதாலும் அவருடைய ஆட்சியை கொண்டுவந்தோம். அதேவகையில் இன்று ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. துரோகிகள் ஆட்சி நடத்துகின்றனர். ஆக, ஆளுமை மிக்க தலைவர் தினகரனை ஆட்சிக்கு கொண்டுவர இந்த ஆட்சியை கலைப்போம்.
சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரும்போது நாங்கள் ஆட்சிக்கு எதிராகவே ஓட்டுப்போடுவோம். அப்போது திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகளும் எதிர்த்துதானே ஓட்டுப்போடும். அதற்காக நாங்கள் இணைந்துவிட்டோம் என்று அர்த்தமா? என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுக்கு பக்கத்தில் இருந்துகொண்டு தினகரனுக்கு எதிரானவற்றை பேசிக்கொண்டு இருக்கிறார். தினகரனுடைய வளர்ச்சிக்கும், தினகரனுக்கும் ஆதரவாக அவர் பேசுவதில்லை. திமுகவில் விரைவில் இணையப்போவதாக தங்க தமிழ்ச்செல்வன் தனது பேட்டிகளில் மறைமுகமாக சொல்கிறார். செந்தில் பாலாஜிக்கு பிறகு தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைய தயாராகிவிட்டார். அவருடைய பேட்டிகளிலிருந்தே அது தெளிவாகிறது என்றார்.



















