இந்தியா
ஆபரேசனின் போது உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்த்த நோயாளி: வீடியோ வைரல்

மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து கொண்டிருந்தபோது நோயாளி உலக கோப்பை கால்பந்து போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த வீடியோவை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
போலந்து நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சைக்கான அனைத்து பணிகளும் தயாராக இருந்தபோது நோயாளி மருத்துவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி ஆபரேஷன் செய்யும்போது தான் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்கலாமா என கேட்டார். அதற்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒப்புக் கொண்டதையடுத்து ஆபரேஷன் தியேட்டரில் ஒரு டிவி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஈரான் மற்றும் வேல்ஸ் அணிகள் இடையே நடந்த கால்பந்து போட்டியை அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது நோயாளி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அவரது இடுப்புக்குக் கீழே அனஸ்தீசியா ஊசி போடப்பட்ட நிலையில் மரத்து இருந்தாலும் அவர் தொடர்ச்சியாக அந்த போட்டியை முழுமையாக பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா உலக கோப்பையின் மீது உள்ள ஆர்வத்தை பார்த்து தன்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை என்று கூறினார். மேலும் டிவியில் கால்பந்து போட்டி ஓடிக்கொண்டு இருந்தாலும் கவனம் சிதறாமல் ஆபரேஷன் செய்த மருத்துவர்களுக்கு தனது பாராட்டுகள் என்று தெரிவித்திருந்தார்.
ஆனந்த் மஹிந்த்ரா பகிர்ந்த இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Hey @FIFAcom Don’t you think this gentleman deserves some kind of trophy…??? https://t.co/ub2wBzO5QL
— anand mahindra (@anandmahindra) December 8, 2022