இந்தியா
தேனிலவு சென்ற இடத்தில் விபரீதம்.. பரிதாபமாக பலியான புதுமாப்பிள்ளை!

தேனிலவு சென்ற இடத்தில் ஏற்பட்ட விபரீதம் காரணமாக 23 வயது புது மாப்பிள்ளை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையை சேர்ந்த முகமது காசிப் என்ற 23 வயது இளைஞனுக்கு சமீபத்தில் திருமணம் ஆனதை அடுத்து தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாட மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாதேரன் என்ற பகுதிக்கு சென்றார். இவர்களுடன் இன்னொரு தம்பதியும் தேனிலவுக்கு சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் மாதேரன் பகுதியில் முகமது ஆசிப் குதிரை மீது சவாரி செய்ய ஆசைப்பட்டதை அடுத்து அவரும் அவருடைய மனைவியும் ஒரு குதிரையில் ஏறி சவாரி செய்தனர். அப்போது திடீரென அந்த குதிரை மிக வேகமாக ஓடியதை அடுத்து முகமது ஆசிப் நிலை தடுமாறி பின்னால் கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்ததால் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவருடைய காயம் தீவிரமாக இருப்பதால் மேல் மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் அவர் அருகில் உள்ள நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி சிறிது நேரத்தில் உயிர் இழந்தார். திருமணமான ஒரு சில நாட்களில் கணவரை இழந்த அந்த பெண்ணின் கதறல் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குதிரைக்கு சொந்தக்காரர் இடமும் போலீசார் விசாரணை செய்ததாக தெரிகிறது. குதிரை திடீரென வேகமாக ஓடியதால் தான் இந்த விபத்து நேர்ந்து உள்ளது என்பதை அடுத்து குதிரை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இது போன்ற குதிரை சவாரி செய்யும் போது தலைக்கவசம் அணிய வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில் இன்னொரு விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதே பகுதியில் குதிரையை சவாரி செய்த ஒரு சிலர் உயிரிழந்ததாகவும் அப்போதே காவல்துறையினர் குதிரை உரிமையாளர்களிடம் குதிரை சவாரி செய்பவர்களுக்கு தலைகவசம் அணிவிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.