சினிமா செய்திகள்
இசைஞானியின் காந்தக்குரலில் ‘மாமனிதன்’ பாடல்: என்ன ஒரு இனிமை!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ‘மாமனிதன்’ என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் ரிலீசாகவில்லை என்பதும் தெரிந்ததே.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு பல்வேறு சிக்கல்கள் இருந்ததாகவும் ஆனால் அந்த சிக்கல்கள் அனைத்தும் தற்போது தீர்க்கப்பட்டு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘மாமனிதன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் சற்று முன் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ’தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக்கதவை’ என்று தொடங்கும் இந்த பாடலை பா விஜய் எழுதியுள்ளார் என்பதும் இசைஞானி இளையராஜா இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் காந்தக்குரலை நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் கேட்டதை அடுத்து அவரது குரலில் உள்ள இனிமையை உணர முடிகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.