தமிழ்நாடு

புதுச்சேரியில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன புதிய தளர்வுகள்?

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஜூலை 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஜூலை 15 வரை நீடிக்கப்பட்டு உள்ள ஊர்டங்கில் கடற்கரை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50 சதவீதம் பேர் பயிற்சி பெறலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவையில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருக்க புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் கடை நடத்துபவர்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து இந்த தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இந்த தளர்வுகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version