சினிமா செய்திகள்
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டிரைலர் வெளியிட்டு விழா: சில முக்கிய தகவல்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களில் யாரும் வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் சிம்பு பா ரஞ்சித் உள்ளிட்டோர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ திரைப்படம் எதிர்பார்ப்பையும் மீறி மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என்றும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அந்த ஆண்டவனுக்கும் இந்த ஆண்டவருக்கு நன்றி என்று தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் சூர்யா ஒருசில காட்சிகளில் நடித்துள்ளார் என்றும், அவருக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் பேசியபோது மதுரை பின்னணியில் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார். மேலும் கமல்ஹாசன் நடித்த படங்களில் விருமாண்டி தனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறினர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியபோது கமல்ஹாசன் அவர்கள் அரசியலில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும் அவர் வருடத்திற்கு ஒரு திரைப்படமாவது நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .
இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன் விக்ரம் படத்தின் சில காட்சிகளை குறிப்பிட்டு தமிழ் மொழியை அனைவரும் கைவிடக் கூடாது என்றும் தமிழ் மொழிக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் முதல் ஆளாக நான் இருப்பேன் என்றும் தெரிவித்தார் .
இதனை அடுத்து விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. விக்ரம் படத்தின் டிரைலர் நேரு ஸ்டேடியத்தில் திரையிடப்பட்டபோது கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனிருத் இசையில் உருவான விக்ரம் படத்தின் பாடல்களும் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.