தமிழ்நாடு
ஜியோ 5G சேவை: தமிழ்நாட்டில் மேலும் 6 நகரங்களில் அறிமுகம்!

இன்றைய தொழில்நுட்ப உலகம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி பயன்பாடுகளுக்கு இடையே தற்போது 5ஜி இணைய சேவையும் அதிவேகமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இன்னும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என்றாலும், அதற்கான வேலையை ஆரம்பித்து விட்டன ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 6 நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.
ஜியோ 5ஜி
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியா முழுவதிலும் கூடுதலாக 41 நகரங்களில் 5ஜி சேவையினை விரிவுப்படுத்தி உள்ளது. இதில், தமிழ்நாட்டில் காரைக்குடி, ராணிப்பேட்டை, தேனி, ஊட்டி, கிருஷ்ணகிரி மற்றும் வாணியம்பாடி உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவையானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் சுமார் 30 நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 6 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நகரங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும், 406 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தற்போது பயன்பாட்டில் உள்ளது. இணைய சேவையின் வளர்ச்சி ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, அதற்கான கட்டணமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கட்டணம்
4ஜி இணைய சேவைக்கே கட்டணம் அதிகமாக உள்ள நிலையில், அதிவேகமான 5ஜி சேவையின் கட்டணமும் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப பொதுமக்களும் அதன் வழியில் தான் செல்ல வேண்டும் என்ற கட்டாய சூழலில் உள்ளனர். இந்த கட்டண உயர்வு, நடுத்தர மக்களை அதிகமாக பாதிக்கும்.