சினிமா செய்திகள்
இயக்கத்துக்குத் திரும்பும் பாடலாசிரியர் பா.விஜய்?

பாடலாசிரியர் பா.விஜய் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘சுவாசமே’, ‘அதீரா’ உள்ளிட்டப் பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் பா. விஜய். ‘ஸ்ட்ராபெர்ரி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
இப்போது ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கும் பீரியட் ட்ராமா கதையை இயக்குவதன் மூலம் மீண்டும் இயக்குநராக களம் இறங்கி இருக்கிறார். படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, ‘சில வருடங்களுக்கு முன்பு ஜீவா, அர்ஜூன் ஆகியோரை வைத்து ‘மேதாவி’ என்ற படம் நான் இயக்குவதாக இருந்தது.
ஆனால், கொரோனா சில காரணங்களால் படப்பிடிப்புத் தொடங்க முடியாமல் தள்ளிப் போனது. அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ரஷ்ய நடிகையும் அந்த சமயத்தில் இறந்து போனதால் அந்தப் படத்தைக் கைவிட ஒரு காரணமாக அமைந்தது.
இப்போது அதே நடிகர்களுடன் பீரியட் ட்ராமாவாக உருவாகும் வேறொரு படத்திற்கு இணைகிறேன் என்பது மகிழ்ச்சி. இதற்காக எனது தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு நன்றி. படத்தின் பெரும்பாலான போர்ஷன்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு எடுக்கிறோம்.
மேலும், ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது’ என்றார் பா. விஜய்.