தமிழ்நாடு
அண்ணாமலையின் கூடாரத்தை காலி செய்கிறாரா எடப்பாடி பழனிசாமி?

அதிமுக-பாஜக கூட்டணியை முறிக்கும் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக அரங்கேறி வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் பாஜக – அதிமுக உறவு சுமூகமாக இல்லை என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். அதன் உச்சக்கட்டமாக அதிமுக, பாஜக மாறி மாறி விமர்சித்து வருகிறது.

#image_title
சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணையும் போது பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தார். அவரை அதிமுக அரவணைத்துக்கொண்டது பாஜகவை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமாவை அறிவித்தார்.
திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவில் இருந்து விலகி சொல்லி வைத்தார்போல் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் மூன்று முக்கிய் பொறுப்பாளர்களும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இது கூட்டணிக்கு வேட்டுவைக்கும் விதமாக உள்ளது. அண்ணாமலையின் கூடாரத்தை காலி செய்து தமிழக பாஜகவினை வலுவிழக்கச் செய்யும் வேலையை எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் மிக கடுமையாக விமர்சித்துள்ளார் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி. இவை அனைத்திலிருந்தும் அதிமுக-பாஜக இடையே சுமூகமான சூழல் இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது.