கிரிக்கெட்
இந்தூர் டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலியா!

இந்தூரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா அணி.

#image_title
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 197 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 88 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பிய இந்தியா 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அபாரமாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை அள்ளினார்.
76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றியை ருசித்தது. ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.