இந்தியா
வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் டாடா ஸ்டீல்? இனி விமானத்தில் செல்வது போல் இருக்குமாம்..!

டாடா ஸ்டீல் நிறுவனம் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் விமானத்தில் உள்ளது போல் சொகுசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்த ரயில்களுக்கு பயணிகளின் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே துறையை திட்டமிட்டுள்ள நிலையில் 200 வந்தே பாரத் ரயில்களை டாடா ஸ்டீல் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் இது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் முதல் ஏசி மற்றும் மூன்றடுக்கு பெட்டிகள் வரை தயாரிக்கப்படும் என்றும் இந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க Linke Hofmann Busch (LHB) என்ற நிறுவனத்துடன் டாடா ஸ்டீல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜன்னல்கள், ரயிலின் உள் கட்டமைப்பு ஆகியவற்றையும் தயாரிக்க டாடா ஸ்டீல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயிலின் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக பன்னாட்டு உருக்கு நிறுவனத்திடம் இந்திய ரயில்வே ரூ.145 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் இந்த பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
வந்தே பாரத் ரயிலின் இருக்கை அமைப்பிற்கு டாடா ஸ்டீல் நிறுவனம் மொத்த ஆர்டரை பெற்று இருப்பதாகவும் இந்த ரயிலில் உள்ள இருக்கையில் 180 டிகிரி வரை சுழலும் வகையில் இருக்கும் என்று விமானத்தில் பயணிகள் பயணம் செய்வது போன்ற சொகுசான வசதிகள் வந்தே பாரத் ரயிலில் வர இருப்பதை அடுத்து இந்தியாவிலேயே முதல் முறையாக பயணிகள் சொகுசாக பயணம் செய்யலாம் என்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவர் தேபாஷிஷ் பட்டாச்சாரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ரயில்களை அதிகரிப்பதன் மூலம் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை தர வேண்டும் என்பதே ரயில்வே நிர்வாகத்தின் நோக்கம் என்றும் இனிவரும் காலங்களில் 200 புதிய வந்தே பைரவர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அந்த ரயில்கள் அனைத்தும் தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் வசதி மற்றும் சொகுசு அம்சங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனவே இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்கள் மூலம் விமானத்தில் பயணம் செய்வது போன்ற சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.