வேலைவாய்ப்பு
குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு: TNPSC அறிவிப்பால் தேர்வர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கு குரூப் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், அதன் காலிப் பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குரூப் 4 தேர்வு
கிராம நிர்வாக அலுவலர் உள்பட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த வருடம் (2022) ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், தற்போது வரையிலும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனையடுத்து தேர்வை எழுதிய தேர்வர்கள், சமூக வலைதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரிக்கை விடுத்தனர். இதன்படி மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு
ஏற்கனவே குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான போது, 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகரித்து, டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அவ்வகையில், 2 ஆயிரத்து 816 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தேர்வர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.