தமிழ்நாடு
படிப்பை முடிக்கும் முன்பே கோடிகளில் வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை!

பிளஸ் டூ முடித்துவிட்டு ஐஐடியில் இடம் கிடைத்துவிட்டால் அந்த மாணவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றும் ஐஐடியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளத்துடன் கூடிய வேலை படித்து முடித்தவுடன் கிடைத்து விடும் என்பதையும் வழக்கமாக பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2022 – 23 ஆம் ஆண்டில் படிப்பை முடிக்கும் சென்னை ஐஐடி மாணவர்களில் பலருக்கு மிக நல்ல வேலை கிடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஐஐடி என்ற தொழில்நுட்ப கழகத்தில் 2022 – 23 ஆம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களில் 445 பேருக்கு, அவர்கள் படித்து முடிக்கும் முன்னரே வேலை கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 25 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது என்பது ஆச்சரியத் தகவல் ஆகும்.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படித்த மாணவர்களுக்கு மற்ற படிப்பு படித்த மாணவர்களை ஒப்பிடும் போது முன்கூட்டியே வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
சென்னை ஐஐடியில் படித்த மாணவர்களில் கடந்த டிசம்பர் மாதத்தின் கணக்கின்படி இதுவரை 445 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 407 மாணவர்களுக்கு வேலை கிடைத்த நிலையில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10% அதிகமான மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர்களில் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சம்பளத்துடன் 25 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் அவர்கள் படிப்பை முடித்தவுடன் அந்தந்த நிறுவனங்களில் வேலையில் சேரப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mckinsey & Co., EY, Amazon, Accenture ஆகிய நான்கு நிறுவனங்களில் தான் அதிகமான மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் சர்வதேச அளவில் பல சலுகைகளை அந்த மாணவர்கள் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2023 மே வரை இன்னும் சில நிறுவனங்கள் சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களை வேலைக்கு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.