இந்தியா
ஐநாவில் இம்ரான்கானை அலறவிட்ட இந்தியாவின் சினேகா; வைரல் வீடியோ!

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி மற்றும் செயலாளருமான சினேகா துபே கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐநா சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றியபோது, ‘இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புவதாகவும்,ஆனால் அதே நேரத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.
இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி சினேகா துபே, ‘ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு அந்த தீயை அணைக்க தீ வைத்தவரே முற்படுவது போல் பாகிஸ்தானின் செயல் உள்ளது என்று கூறியதோடு, பாகிஸ்தான் தொடர்ச்சியாக பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருகிறது என்றும் இது உலகத்திற்கே பெரும் ஆபத்தாக உள்ளது என்றும் உலக அரங்கில் பொய்யை மட்டுமே பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும் அந்த பொய்யை அம்பலப்படுத்தும் கடமை அண்டை நாடான எங்கள் நாட்டிற்கு இருக்கிறது என்றும் கூறினார்.
காஷ்மீர் மற்றும் லடாக் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் கூறிய சினேகா துபே, உலகையே அதிர வைத்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு தான் பாகிஸ்தான் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மேலும் பின்லேடன் போன்ற ஒரு நபரை தியாகி போல் சித்தரித்து வரும் பாகிஸ்தான் அமைதியை விரும்புவதாக கூறுவது அப்பட்டமான பொய் என்றும், பாகிஸ்தான் அமைதியை விரும்பினால் முதலில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியாவின் இளம் வெளியுறவுத்துறை அதிகாரி சினேகா துபேயின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.