தமிழ்நாடு
பொள்ளாச்சியில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்கு தெரியாது: பாஜக எம்பி இல.கணேசன்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கும்பல் ஒன்று சமீபத்தில் கைது செய்யப்பட்டது. இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் அரசியல் பலமும், சாதிய பலமும் நிறைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ராகுல் காந்தியின் தமிழக வருகை குறித்தும் அவரது பிரச்சாரம் குறித்தும் விமர்சித்தார்.
அப்போது செய்தியாளர்கள் இல.கணேசனிடம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டு மிரட்டப்பட்ட விவகாரம் குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, பதில் அளித்த அவர், எனக்கு அந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது. அதுபோன்ற செய்திகளை நான் ஆழமாகப் படிப்பதில்லை. தெரியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்றார்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்கு தெரியாது என இல.கணேசன் கூறியுள்ளது பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.




















