தமிழ்நாடு

வெப்ப அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்: சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்கள்!

Published

on

கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்ப அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சில வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறை அனுப்பி வைத்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

  • வெப்ப அலையை எதிர்கொள்வதற்கு, மாவட்ட அளவிலான செயல் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம். இந்த செயல் திட்டங்கள், மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருத்தல் வேண்டும்.
  • மருத்துவ அலுவலர்கள் அனைவரும், வெப்ப பாதிப்புகளை கண்டறிவதில் திறமை பெற்றிருத்தல் வேண்டும்.
  • அதீத வெப்பத்தால் என்னென்ன தீமைகள் உண்டாகும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • ORS பாக்கெட்டுகள் மற்றும் ஐஸ் பேக்குகள் போன்ற அத்தியாவசியமான மருந்துகளை எப்போதுமே போதுமான அளவு கையிருப்பு இருத்தல் வேண்டும்.
  • அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதீத வெப்பத்தால் உண்டாகும் பக்கவாதம் மற்றும் இறப்பு போன்றவற்றை தினமும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதீத வெப்பத்தால் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை அனைத்து மருத்துவமனைகளிலும் முறையாக பராமரிக்க வேண்டும்.
  • தேவைக்கு அதிகமான அளவில் குடிநீர், குளிரூட்டும் கருவிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஐஸ் பாக்கெட்டுகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
  • குளிரூட்டும் கருவிகள் மற்றும் இதர மின் சாதனங்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

பொதுமக்களுக்கான அறிவுரைகள்

  • பொதுமக்கள் அனைவரும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • முடிந்த வரையில் வீட்டுக்குள்ளேயே இருப்பது நல்லது.
  • ஒருவேளை வெயிலில் செல்லும் சூழ்நிலை உருவானால் குடை அல்லது உடலை முழுமையாக மறைக்கும் பருத்தி ஆடைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
  • சூடு, தோலில் எரிச்சல் உண்டானால் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
  • பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.
  • நண்பகல் 12 மணி முதல் மாலை 3 வரை சூரிய ஒளியில் வருவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்.

Trending

Exit mobile version