இந்தியா

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

Published

on

தங்க நகை கடைகளில் ஹால்மார்க் முத்திரை குத்தி விற்பனை செய்துவரும் நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் லீனா நந்தன் அவர்கள் ’தங்க நகைகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்று கூறியுள்ளார். நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ஏற்கனவே பலமுறை ஒத்தி போடப்பட்டு உள்ளதாகவும், எனவே ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் மீண்டும் கால நீடிப்பு கோரிக்கைகள் எதுவும் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்கள் ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்பட பல நகரங்களில் இன்னும் ஒரு சில கடைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் ஆனால் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து அவ்வாறு இனிமேல் விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு உள்ளதா என்பதை அறிந்து தங்க நகைகளை வாங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தங்க நகை கடைக்காரர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version