தமிழ்நாடு
ஆன்லைன் ரம்மி… ஆளுநரின் செயல் மக்களை அவமதிக்கும்… மனிதநேயமற்றது: அன்புமணி காட்டம்!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை தொலைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகி இறுதியில் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் நடந்த கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இதனை தடை செய்வதற்கான தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தொடர் விமர்சனங்கள் வந்தவாறு உள்ளன.

#image_title
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடுமையாக பேசியுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகி உள்ளார்கள். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 47-வது தற்கொலை இது. புதிய சட்டம் இயற்றப்பட்ட 139 நாட்களில் 18 பேர் தற்கொலை செய்துள்ளார்கள்.

#image_title
ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை, மற்றவர்களை காப்பாற்றுவதற்காவது இதை தடை செய்யுங்கள் என தற்கொலை கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் எதார்த்தமும், வலியும் ஆளுநருக்கும், அதிகாரத்தில் இருப்பவருக்கும் உரைக்க வேண்டும். இதனை தடை செய்ய அரசு சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகியும், அதன் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல். இதைவிட மனிதநேயமற்ற நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநருக்கு எதிராக மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாமக நடத்தும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.