உலகம்

கூகுளில் வேலையிழந்த கணவன் – மனைவி.. 4 மாத கைக்குழந்தையுடன் தவிப்பு!

Published

on

கூகுள் நிறுவனம் சமீபத்தில் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அவர்களில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது நான்கு மாத குழந்தையுடன் பரிதவிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் மற்றும் வட்டி உயர்வு காரணமாக ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது. இதனை அடுத்து பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைக்காக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது.ஏற்கனவே மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் கூகுள் சமீபத்தில் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது.

தலைசிறந்த ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது மனது வருத்தமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் வேலை நீக்கம் செய்கிறோம் என சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கூகுளில் இருந்து கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஸ்டீவ் மற்றும் அல்லி ஆகிய தம்பதிகள் இருவருமே கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

அல்லி கடந்த ஆறு ஆண்டுகளாகவும் ஸ்டீல் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் கூகுளில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் பேர்கால விடுப்பு எடுத்த அல்லி சமீபத்தில் குழந்தை பெற்றுள்ளார். இன்னும் இரண்டு மாதம் கழித்து அவர் மீண்டும் அலுவலகம் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் மருத்துவ விடுப்பு அதிகம் இருந்ததால் ஸ்டீவ் விடுமுறை எடுத்திருந்ததாகவும் அடுத்த மாதம் அவர் மீண்டும் பணியில் சேர திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தான் இருவருமே வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நான்கு மாத குழந்தையை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்ற பரிதாபத்தில் ஸ்டீவ் மற்றும் அல்லி தம்பதிகள் உள்ளதாக என்று தெரிகிறது.

Trending

Exit mobile version