இந்தியா
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரிமுத்துவுக்கு தடை: தடகள சம்மேளனம் அதிரடி!

தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து என்ற பெண் கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். அனைவரும் அவரை தூக்கி வைத்து கொண்டாடினர். பத்திரிக்கைகளில் முதன்மை செய்தியானார் கோமதி மாரிமுத்து.
ஆனால் அவர் தற்போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். தடைசெய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற மருந்துகளை பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால் கோமதிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது இந்திய தடகள சம்மேளனம்.
இந்திய தடகள சம்மேளனம் இதுகுறித்து அறிவித்துள்ளதாவது, ஆசிய போட்டியில் போது ஊக்கமருந்து சோதனைக்காக கோமதியின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளது. மார்ச் மாதம் நடந்த பெடரேஷன் கோப்பை, தோஹாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஆகிய இரண்டிலும் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி அடைந்துள்ளார் இதனையடுத்து அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தகட்ட சோதனைக்காக அவரது பி சாம்பிள் கேட்கப்பட்டுள்ளது. அந்த சோதனையிலும் அவர் தோல்வியடைந்தால், 4 ஆண்டுகள் தடை அவருக்கு விதிக்கப்படும்.



















