கிரிக்கெட்
பந்துவீச்சில் அசத்திய குஜராத்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். பட்லர் 8 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் திணறல்
சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்து களமிறங்கிய அஸ்வின் 2 ரன்கள், ரியான் பராக் 4 ரன்கள், தேவ்தத் படிக்கல் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்த ஹெட்மையர் 7 ரன்களுக்கும், ஜூரல் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். முடிவில் 17.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ராஜஸ்தான் அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
குஜராத் வெற்றி
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சகா ஆகிய இருவரும் களமிறங்கினர். கில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடினார். பாண்ட்யா 39 ரன்களும், சகா 41 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
இறுதியில் குஜராத் அணி 13.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்களை எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது குஜராத் அணி. அத்துடன் குஜராத் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறி உள்ளது.