தமிழ்நாடு
மத்திய அரசில் ஸ்டாலின், மாநிலத்தில் உதயநிதி… நாடு தாங்குமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே. நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

#image_title
அப்போது பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை தற்போது தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்து அறிமுகப்படுத்துகிறார். ஏன் திமுகவில் மூத்த தலைவர்களே இல்லையா? உதயநிதி மூலமாக அவர் தன்னை வளர்த்து வருகிறார். இதனால் தான் திமுகவை கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி என்று சொல்கிறோம்.
ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு பல்வேறு மாநில தலைவர்களை பேச வைத்து தேசிய தலைவராக தன்னை முன்னிறுத்த பார்க்கிறார். அவருக்கு இங்குள்ள அரசியலே ஒன்றும் தெரியாது. இதில் தேசிய அரசியல் எதற்கு? மத்திய அரசில் அவரும், மாநில அரசியலில் அவரது மகனும் வரவேண்டும் என கனவு காண்கிறார். இதனை நாடு தாங்குமா?
இப்படி தனது குடும்பத்தை வைத்து அரசியல் செய்து வரும் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றால் மக்கள் தான் அதற்கான மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்றார்.