தமிழ்நாடு
எடப்பாடி – பன்னீர் தரப்பு மோதல்: கூலாக பதில் சொன்ன அண்ணாமலை!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் கருத்து தெரிவித்து பேசியதற்கு ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூலாக பதில் அளித்துள்ளார். சமீபத்தில் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்துவந்த நிலையில் அவரது இந்த பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

#image_title
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அதன் பின்னர் ஓபிஎஸ் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என பேசினார். இவரது பேச்சால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், அதிமுக உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. அது அவர்கள் பொறுப்பு என்று கூலாக பதில் அளித்தார். முன்னதாக அதே பேட்டியில், பாஜகவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த கட்சியோடும், தலைவரோடும் கோபம் இல்லை. அதிமுக ஒரு பெரிய கட்சி, அந்த கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்திருக்கிறார்கள் என அண்ணாமலை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.