தமிழ்நாடு

இன்று பொறியியல் படிப்புக்கு தரவரிசை பட்டியல்: மாணவர்கள் ஆர்வம்!

Published

on

இன்று தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தரவரிசை பட்டியலை காண காத்திருக்கின்றனர்.

பொறியியல் படிப்புக்கான பிஇ, பிடெக் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு கடந்த சில நாட்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்பதும் செப்டம்பர் 14-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பொறியியல் படிப்புகளுக்கு சேர்ப்பதற்காக ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பதும் இவர்களில் 2426 பேர் விளையாட்டு வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் செய்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வரும் 17ஆம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து கலந்தாய்வு ஆன்-லைன் மூலமே நடைபெறும் என்றும் முதல்கட்டமாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அதனை அடுத்து பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு கலந்தாய்வு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் என்றும், அதனையடுத்து பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதனை அடுத்து துணை கலந்தாய்வு அக்டோபர் 19 முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட உள்ளதால் பல அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version