சினிமா

எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…

Published

on

சின்ன வயதில் விட்டுப்போன அண்ணனை தேடிப் போகிறார் தம்பி. போன இடத்தில் போலீசில் உயர்பதவியில் இருக்கும் அண்ணனுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களை எல்லாம் மீட்டு அண்ணனை நல்லவன் என நிரூபிக்கிறார் தம்பி. அண்ணனுக்கு என்ன சிக்கல்… அவர் என்ன ஆனார் என்பது தான் எனை நோக்கி பாயும் தோட்டா…

 

தன் கல்லூரிக்கு சினிமா சூட்டிங்கிற்காக வரும் கதாநாயகியை பார்த்ததும் காதல் கொள்கிறார் தனுஷ். பார்வையிலேயே பேசிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு ஒருநாள் அந்தப் படத்தில் கதாநாயகி விருப்பமில்லாமல்தான் நடிக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார். அதை தொடர்ந்து அவருக்கு இருக்கும் பல்வேறு சிக்கல்களை தீர்த்து நாயகியை கரம் பிடிக்கிறார் நாயகன்…

திகட்ட… திகட்ட காதல்… திடீரென காதலி விட்டுப்போக நான்கு ஆண்டுகள் கழித்து அவரிடம் இருந்து ஒரு போன்… தான் மிகப்பெரிய சிக்கலில் இருப்பதாக. வந்து காப்பாற்றச் சொல்கிறார். காப்பாற்ற செல்லும் நாயகன் அவரை எப்படி மீட்டார் என்ன ஆனது என்பதை சொல்லும் படம் தான் எனை நோக்கிப் பாயும் தோட்டா…

என்னடா கதையே இல்லாம படம் எடுக்கும் காலத்தில் இவ்ளோ கதைகளோட ஒரு படமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ரெண்டு நாளா யோசிச்சு எது கதையா இருக்கும் என்ற குழப்பத்தில் நானா ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு இன்னும் எத்தனை கதைகள் தெரிந்தாலும் கீழே சொல்லுங்கள்.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது… எனை நோக்கி பாயும் தோட்டா… விஜய் சேதுபதி மாதிரி ஆண்டுக்கு 5 படங்கள் தனுசுக்கும் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி தன்னுடைய நடிப்பை கதைக்கு ஏற்றார் போல கொடுக்கிறார் தனுஷ். எனை நோக்கி பாயும் தோட்டாவிலும் அப்படியே செய்திருக்கிறார்.

இது ஒரு கௌதம் வாசுதேவ் மேனன் படம்… நாயகன் அழகாக இருப்பார்… நாயகி அவரை விட அழகியாக இருப்பார்… எல்லோரும் நடித்து கதை நமக்கு புரிய வைத்தாலும் ஒருவர் கதை சொல்லிக்கொண்டே இருப்பார். ஸ்டைலாக பேசுவார்கள் வீட்டு வேலை பார்ப்பவர்கள் கூட… அழகான இடங்களாக இருக்கும். அதுவும் நம்ம ஊரிலேயே இருக்கும்… இசை செம்மையாக இருக்கும்… பாடல்களும் அப்படியே இருக்கும்… சண்டை காட்சிகள் செம்ம ரிச்சாக இருக்கும்… ஒரு கதாபாத்திரம் வரும்… உடனே செத்துவிடும்… படம் முடிந்த பின் கிளைமாக்ஸ் சொல்லப்படும்… காதல்… கதலோ காதலாக இருக்கும்… அப்படி ஒருமுறை காதல் செய்துவிட வேண்டும் என படம் பார்க்கும் எல்லோருக்கும் தோன்றும்… பேசுபவர்கள் எல்லோரும் பேஸ் வாய்சில் பேசுவார்கள்… வில்லன் மிரட்டி எடுப்பார்… இது எல்லாம் அப்படியே இருக்கிறது…

மேகா ஆகாஷ் அழகா இருக்கிறார்… முதல்படம்… இன்னும் அவரிடம் நிறைய எதிர்பார்த்துள்ளது இந்த தமிழ்சினிமா… சசிக்குமார் கொஞ்ச நேரமே வருகிறார். ஆனால், அவரது கதாபாத்திரம் படம் முழுவதும் வருவதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தின் மற்றொரு பலம் இசை… மிஸ்டர் எக்ஸ் என முன்னரே வெற்றி பெற்றாலும் பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.

தனுஷ்… கௌதம் மேனன் இணைந்ததுமே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. தடை மேல் தடை இயல்பாகவே இந்தப் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு ஏறிவிட்டது. ஆனால் அதை எல்லாம் இந்தப் படம் தாங்கிக்கொண்டு நின்றதா என்றால் இல்லை என்பதுதான் பதில்… ஆனால், அதற்கு கௌதமோ தனுசோ ஒன்றும் செய்ய முடியாது…

எப்படியே இருந்தாலும் முதல் பாதி ஓரளவு பொறுத்துக்கொண்டு பார்க்க முடிந்ததாகவே இருந்தது. டெக்னிக்கலாக வழக்கம்போல இதுவும் நல்ல படம்தான். படத்தின் பெரும்பாலான நேரம் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற குழப்பத்துடனே படம் பார்க்க முடிந்தது.

இரண்டாம் பாதிதான் படம் என்ன சொல்ல வருகிறது… எங்கு செல்கிறது… எப்போது முடியப் போகிறது… இரண்டாம் பாகத்தில் சொல்லப்போகிறோம் என சொல்லிவிடுவார்களோ என பல குழப்பத்தை பாக்குறவங்களுக்கு கொடுக்கிறது. பல சிரமங்களுக்கு இடையே படம் இயக்கி, தயாரித்து வெளியில் கொண்டுவரும் கௌதம் வாசுதேவ்  மேனன் கொஞ்சம் திரைக்கதைக்கும் சிரமப்பட்டால் அடுத்தடுத்த படங்களில் தன் ரசிகர்களை தன் வசம் வைத்துகொள்வார் கௌதம். அப்படி இல்லை என்றால் கொஞ்சம் சிரமம் தான். அடுத்தடுத்து வரும் தோட்டாக்கள் எப்படி இருக்கின்றன என பொறுத்திருந்து பார்க்கலாம்…

Trending

Exit mobile version