இந்தியா

ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட கூடாது: ராகுல் காந்திக்கு செக்கா?

Published

on

தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் மேல் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் ஆணையத்திற்கு வீண் நேர விரயம் மற்றும் செலவு ஆகிறது என்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் ராஜினாமா செய்வது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

1996ஆம் ஆண்டுக்கு முன் ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் 1996ஆம் ஆண்டு இதில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் ஒருவேளை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றிபெற்று ராஜினாமா செய்யும் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேவைப்படும் செலவுக்கு நிகரான டெபாசிட் தொகையை வேட்பாளர் செலுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது.
ஆனால் இந்த முன்மொழிவை மத்திய அரசு ஒப்புக் கொள்ளுமா என்பது சந்தேகம் தான்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். அதன் பிறகு அவர் வதோதரா தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வயநாடு பகுதியில் மட்டும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் தேர்தலிலும் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதால் அவருக்கு செக் வைப்பதற்காக இந்த சட்டம் கொண்டுவர உள்ளதா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

 

Trending

Exit mobile version