சினிமா செய்திகள்
இவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது இயக்குநர் செல்வராகவன் உருக்கமான பதிவு!

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நண்பர்கள், நட்பு குறித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
’துள்ளுவதோ இளமை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்டப் பல படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். ’சாணிக்காயிதம்’, ‘பாகசூரன்’ ஆகிய படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பல தத்துவங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருபவர் இயக்குநர் செல்வராகவன். இது குறித்துப் பல பேட்டிகளில் கேட்டபோது, ‘என் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட விஷயங்களையே இங்கே பகிர்கிறேன்.
இதற்கென்று தனியாக யோசிப்பதில்லை’ எனவும் தெரிவித்து இருந்தார். அந்த வகையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நட்பு குறித்தும் நண்பர்கள் குறித்தும் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘என் அனுபவத்தில் சொல்கிறேன்.
நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாக வேலையைத் தவிர எதையுமே யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. எங்கு போய் நட்பை தேடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார். செல்வராகவனின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.