இந்தியா
8 மணி நேர விசாரணைக்கு பின் டெல்லி துணை முதல்வர் கைது.. அர்விந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிலையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்த நிலையில் விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்தக் கொள்கையின் அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபான உரிமை வழங்கியதாகவும் இதில் பல்வேறு முறைகேடுகள் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா என்பவரின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து ஆம் ஆத்மி அரசு திடீரென புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றுக் கொண்டதாக அறிவித்தது. ஆனாலும் இந்த முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணி சிசோரியா உள்பட 15 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ இதுகுறித்து மணிஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் வீடுகளில் அதிரடி சோதனையும் நடத்தியது.
இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சமன் அனுப்பிய நிலையில் அந்த சம்மனை ஏற்று நேற்று மணிஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜராவதை முன்னிட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்து வருவார்கள் என்பதால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் விசாரணையின் இறுதியில் அவரை கைது செய்வதாக சிபிஐ அதிகாரிகள் அறிவித்தனர். இது குறித்து தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘தரந்தாழ்ந்த அரசியல் கைது இது’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சிபிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டு மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கடந்த 2021 – 22 ஆம் ஆண்டு கலால் கொள்கையை அமல்படுத்துவதில் தனியார் நிறுவனங்கள் லாபமடையும் வகையில் நடந்து கொண்டதற்காக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையின் போது மணிஷ் சிசோடியா அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்றும் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் ஆதாரங்களை காண்பித்து அது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் எனவே அவரை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்பதால் கைது செய்யப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.