தமிழ்நாடு
வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமீன் மறுப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். இந்நிலையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.

#image_title
பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடந்த போதிலும் தேஜஸ்வி யாதவ் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளார் என அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் பிரசாந்த் உம்ராவ். மேலும் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 வடமாநில தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாகவும் ஒரு விஷமத்தனமான தகவலை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரசாந்த் உம்ராவ்வை கைது செய்ய திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்தது. இந்நிலையில் பிரசாந்த் உம்ராவ் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் வழக்கு தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை 10 நாட்களில் அனுகி நிவாரணம் கேட்க அறிவுறுத்தியது டெல்லி நீதிமன்றம்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார் பிரசாந்த் உம்ராவ். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், மனுதாரரின் போலி வீடியோ பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்து இந்தியா முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, இந்த வீடியோக்களை பார்க்கும் போது தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நிதிபதி. இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.