இந்தியா

இஸ்ரேலில் காணாமல் போன கேரள நபர்.. கண்டுபிடித்து நாடு கடத்த கேரள அரசு கோரிக்கை..!

Published

on

கேரளாவிலிருந்து விவசாயம் குறித்த தொழில் நுட்பத்தை படிப்பதற்காக இஸ்ரேல் சென்ற ஒருவர் திடீர் என காணாமல் போனதை எடுத்து அவரை கண்டுபிடித்து நாடு கடத்துங்கள் என கேரளா அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கேரளாவை சேர்ந்த விவசாயி பிஜூ என்பவர் தனது குழுவினர் உடன் விவசாயத்தின் ஹைட்ரோபோனிக் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்வதற்காக இஸ்ரேலுக்கு சென்றார். அங்கு அனைத்து பணிகளும் முடிந்த பிறகு இந்தியாவுக்கு திரும்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அவர் காணாமல் போனதாகவும் அவரது கையில் ஐம்பதாயிரம் இஸ்ரேலிய கரன்சி இருந்ததாகவும் உடன் வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருந்துகள் வாங்க வேண்டும் என்று கூறி அவர் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் பல மணி நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை என்றும் அந்த குழுவில் இருந்த மற்றொரு விவசாயி குறித்துள்ளார். மேலும் இன்னொரு விவசாயி இதுகுறித்து கூறியபோது, இஸ்ரேலில் துப்புரவு தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள் என்றும் பண்ணை தொழிலாளர்கள் இன்னும் அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் அந்த வேலையில் சேர தனக்கு ஆர்வமாக இருந்ததாக கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து ஏதாவது ஒரு பண்ணையில் அவருக்கு வேலை கிடைத்திருக்கலாம் என்றும் அவர் தலைமறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காணாமல் போன பிஜூவை தேடும் பணியில் உள்ளூர் காவல்துறை, இந்திய தூதரக அதிகாரிகள் ஆகியோர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினர் அவர் மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து கூறியபோது அவரை தேடும் பணியை நிறுத்துமாறு அவர் பாதுகாப்பாக இருப்பதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும் கூறி உள்ளனர்.

இந்த நிலையில் பிஜூவை கண்டுபிடித்து அவரை நாடு கடத்த கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிஜூவின் விசாவை ரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து இஸ்ரேல் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறிய போது நாங்கள் பிஜூ மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றும் அவரை கைது செய்தவுடன் அவரை நாடு கடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version