சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டாருடன் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்: 21 வருட கனவு நனவானது!

கேரள மாநிலத்தில் பிறந்த 28 வயதான சஞ்சு சாம்சன், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஆவார். மேலும், இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். மிகவும் அதிரடியாக மற்றும் பெரிய உழைப்பில்லாமல் சிக்ஸர்களை பறக்க விடுவதில் திறமை பெற்றவர் சஞ்சு. இவரின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு இந்தியா முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். இவரது ஆட்டத்திறனை கண்டு வியந்து, அயர்லாந்து அணி கூட எங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுங்கள் என்று அழைப்பு விடுத்தது. ஆனால், இந்திய நாட்டிற்காக விளையாடுவதையே குறிக்கோளாக கொண்டு, அயர்லாந்து அணி அளித்த வாய்ப்பை மறுத்து விட்டார்.
ரஜினிகாந்தின் ரசிகர்
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், சிறு வயதில் இருந்தே தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் என பல நேர்காணல்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவரை நிச்சயம் ஒருநாள் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அவருடைய கனவு நனவாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2023 மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக சஞ்சு சாம்சன் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தன் பேரில், சஞ்சு சாம்சன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார்.
கனவு நனவானது
சஞ்சு சாம்சன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 7 வயதில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன் நான். சிறு வயதில் இருந்தே எனது பெற்றோர்களிடன் கூறி வந்தேன், நிச்சயமாக ஒரு நாள் ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று சந்திப்பேன் என்று. “தலைவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்ததன் மூலம் சுமார் 21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.