இந்தியா
புல்வாமா தாக்குதல், படப்பிடிப்பில் பிஸியாக இருந்த பிரதமர் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடைபெற்ற அன்று மாலை பிரதமர் மோடி படப்பிடிப்பு ஒன்றில் பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, புல்வாமா தாக்குதல் 3.10 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஆனால் பிரதமர் மோடி தனது விளம்பர படத்திற்காக, கார்பெட் தேசிய பூங்காவில் மாலை 6.10 மணி வரை படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார்.
தாக்குதல் நடைபெற்றது தெரிந்தும் அவர் படப்பிடிப்பில் இருந்துள்ளார். ஒட்டுமொத்த நாடும் நமது வீரர்களை எண்ணி கவலையிலிருந்தபோது மோடி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இப்படி ஒரு பிரதமர் உலகத்தில் உண்டா என கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும் அனைவரும் பசியிலிருந்த போது, அவர் படகில் சவாரி செய்து முதலைகளை பார்வையிட்டு படக் குழுவினருடன் டீயும், சமோசாவும் சாப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.




















