இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: ஐநா அதிகாரி பகிர்ந்த புகைப்படங்களால் அதிர்ச்சி..!

Published

on

ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை புகைப்படம் எடுத்து ஐநா அதிகாரி ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஏர் இந்தியா விமான அதிகாரிகள் மோசமான சேவைக்காக ஐநா சபை தூதர் ஒருவரின் கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளனர். நியூயார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்த ஐநா அதிகாரி தன்னுடைய இருக்கையில் கரப்பான் பூச்சி இருப்பது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

ஐநா அதிகாரியான நான் உலகம் முழுவதும் விமானத்தில் பறந்து பயணம் செய்திருக்கிறேன். ஆனால் ஏர் இந்தியா 102 விமான பயணம் எனது மோசமான விமானம் பயணம் என தெரிவித்துள்ளார். உடைந்த இருக்கைகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் ஆகியவை இருப்பதை பார்த்த நான் இந்த பயணத்தை தவிர்த்து இருக்கலாம் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.

நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்தபோது ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி இருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தை பதிவு செய்து இதற்கு விளக்கம் கேட்டு ஏர் இந்தியாவுக்கு டேக் செய்து உள்ளார். ஏர் இந்தியா விமானங்கள் கரப்பான் பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளதை விமான நிறுவனம் எவ்வாறு கவனிக்காமல் இருந்தது என்றும் இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ஐநா அதிகாரிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தாங்கள் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் விமானத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு இது போன்ற மோசமான அனுபவம் ஏற்படுவது முதல் முறையல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு போபாலில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வழங்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்தார். அதேபோல் காலை உணவின் சாம்பாரில் இறந்த கரப்பான் பூச்சி இருந்ததையும் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா விமானத்தை டாடா நிறுவனம் கடந்த ஆண்டு வாங்கிய நிலையில் விமானங்களை சீரமைப்பு செய்து பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Trending

Exit mobile version