ரஜினி பட கதைத் திருட்டு: இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரன்ட் போட்ட நீதிமன்றம்… அடுத்து கைதா..?

ரஜினி பட கதைத் திருட்டு: இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரன்ட் போட்ட நீதிமன்றம்… அடுத்து கைதா..?

கடந்த 2010 ஆம் ஆண்டு, ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'எந்திரன்'. இந்தப் படத்தின் கதைத் திருடப்பட்டு படமாக எடுக்கப்பட்டது என்று வழக்குத் தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தான் தற்போது சென்னை, எழும்பூர் நீதிமன்றம் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஷங்கர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

எழுத்தாளர் ஆரூர் நடராஜன் என்பவர், கடந்த 2007 ஆம் ஆண்டு 'திக் திக் தீபிகா' என்னும் நாவலை எழுதி வெளியிட்டார். இந்த நாவலின் அடிப்படையில் தான் எந்திரன் கதை அமைக்கப்பட்டிருந்ததாக அவர் அப்போதே குற்றம் சாட்டினார். நீதிமன்றத்திலும் அவர் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் தரப்பில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 'வழக்கை விசாரிக்க முகாந்திரம் உள்ளது. எனவே விசாரணைக்கு அனுமதிக்கிறோம்' என்று உத்தரவிட்டன இரண்டு நீதிமன்றங்களும். இதனால் கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஷங்கர், நேரில் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர் வழக்கை நடத்தி வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஷங்கர் தரப்பில் யாரும் ஆஜராகாத காரணத்தில் கொதிப்படைந்த நீதிமன்றம், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலான பிடிவாரன்டைப் பிறப்பித்தது. இந்த வழக்கு, மீண்டும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் ஷங்கர், கைது செய்யப்பட கூட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com