'தி பேமிலி மேன் - 2' தொடருக்கு தடை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

'தி பேமிலி மேன் - 2' தொடருக்கு தடை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

பிரபல நடிகை சமந்தா நடிப்பில் உருவான 'தி பேமிலி மேன் - 2' என்ற தொடர் அமேசான் தளத்தில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த தொடரை தடைசெய்ய வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தி பேமிலி மேன் - 2' என்ற, ஹிந்தி தொடரின் முன்னோட்டம், ஈழத் தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. தமிழ் பண்பாட்டை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை கொண்ட தொடரை, எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளை கொண்டது எனக் கருத முடியாது. தமிழ் பேசும் நடிகையான சமந்தாவை, பயங்கரவாதியாக காட்சிப்படுத்தி உள்ளது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடி தாக்குதல். இதுபோன்ற விஷமத்தனமான பரப்புரையை, யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.

இந்த தொடரின் முன்னோட்டம், ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே, பெரும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது. இத்தொடரானது, ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது, தமிழக தமிழர்களின் உணர்வுகளையும், பெருமளவில் புண்படுத்தி உள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினமாகும். அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை, தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

ஏற்கனவே 'தி பேமிலி மேன் - 2' தொடரை தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது தமிழக அரசு களமிறங்கி உள்ளதால் இந்த தொடருக்கு அனுமதி கிடைக்குமா அல்லது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com