தமிழ்நாடு
இது தான் ஆளுநர் செயல்படக்கூடிய லட்சணமா? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சாதாரண சட்டத்திற்கு கூட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
#image_title
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னை கொட்டிவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தார். அதில், சூதாட்டம், நுழைவுத்தேர்வால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க சட்டம் நிறைவேற்றினால் அதை ஆளுநர் தடுக்கிறார்.
நான்கு மாதம் கழித்து மாநில அரசுக்கு சட்டம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை என சொல்கிறார் ஆளுநர். சாதாரண சட்டத்தை கூட நிறைவேற்ற முடியாத மாநிலத்துக்கு தான் ஆளுநராக இருக்கிறாரா அவர்? நீட் விலக்கு கேட்டு அவசர சட்டம் இயற்றி அனுப்பினால் அதை நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டுத்தான் குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார். பல்கலைகழகங்களில் வேந்தர் சட்டம் முடக்கப்பட்டு கிடக்கிறது. இதுதான் ஆளுநர் செயல்படக்கூடிய லட்சணமா? என விமர்சித்துள்ளார் முதல்வர்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், உழவர்களுக்கு எதிராக சட்டம் உடனடியாக நிறைவேறும், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் வேகமாக நிறைவேறும். நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவக்கனவை தடுப்பார்கள். இந்தியை திணிப்பார்கள், பிற மதத்தவர் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் சூதாட்டத்தாலும், நுழைவுத்தேர்வாலும் உயிர்கள் பலியாவதை தடுக்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள் என குறிப்பிட்டார்.