தமிழ்நாடு
அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ பெயரை சூட்டிய முதல்வர்!

அரியலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நீட் எனும் பெயரில் நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வை எதிர்த்துப் போராடினார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. ஆனால், அவரின் போராட்டம் முடிவடைவதற்கு முன்னதாகவே கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் அனிதாவிற்கு ஆதரவாகப் போரட்டத்தில் இறங்கினர். இருப்பினும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
அனிதா ந1200 அரங்கம்
அரியலூரில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 22 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயரைச் சூட்டி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அனிதா நினைவு அரங்கத்தில் சுமார் 850 நபர்கள் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு தான் மாணவி அனிதா போராடி வந்தார். அவருக்கு எமனாக வந்தது தான் மத்திய அரசு கொண்டு வந்த இந்த நீட் தேர்வு. மருத்துவர் கனவு கலைந்த கவலையில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அரியலூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவி அனிதாவை நினைவு கூறும் வகையில், மருத்துவ கல்லூரி அரங்கிற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.