தமிழ்நாடு
உலக பசுமை விருதை தட்டிச் சென்றது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!

2023 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான பசுமை உலக விருதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ஆகும். சென்னை மெட்ரோவின் பராமரிப்புக்கு கிடைத்த பரிசு தான் இந்த உலக பசுமை விருது.
சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உலக பசுமை விருது கிடைத்தது குறித்து, செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில், சர்வதேச பசுமை உலக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்தது. இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2023 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான பசுமை உலக விருதினைப் பெற்றுள்ளது.
உலக பசுமை விருது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. கட்டுமானம் மற்றும் பல்வேறு செயல்பாடுகளின் போது சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதை குறைக்க வேண்டும் என்பதை உயரிய நோக்கமாக கொண்டுள்ளது. காற்றின் தரத்தினை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்தல், சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த சுற்றுச்சூழல் தொடர்பான தோட்டங்களை உருவாக்கி பராமரித்தல் போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததன் காரணமாகத் தான் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பசுமை விருது கிடைத்துள்ளது. இனி வரும் காலங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எந்தக் குறையும் இருக்காது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.