சினிமா செய்திகள்
நானியின் ‘தசரா’ படத்திற்கு எதிராக வழக்கு?

நானியின் ‘தசரா’ படத்திற்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய படம் ‘தசரா’. இந்த மாதம் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கக்கூடிய நிலையில், அனைத்து மொழிகளிலும் படத்திற்கான புரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படியான ஒரு சூழலில்தான் ‘தசரா’ படத்தலைப்பிற்கு எதிர்ப்பு வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சாமி மூவிஸ் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு ‘தசரா’ எனும் தலைப்பைப் பதிவு செய்திருக்கிறது.

Nani in Dasara Movie
இப்போது வரை தலைப்பைப் புதுப்பித்து வரக்கூடிய நிலையில், நானி படத்திற்கும் அதே தலைப்பு வைத்துள்ளதால் அந்த நிறுவனம் ஃபிலிம் சேம்பரில் புகார் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய வகையில், இதன் செயலாளர் கிருஷ்ணா, நானி படத்தலைப்பிற்கு முன்னதாக ‘நானி’ஸ் தசரா’ என வெளியிடும்படி படத்தின் தயாரிப்பு தரப்பிடம் சொல்லி இருக்கிறார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இப்போது வரை படத்தின் புரோமோஷன்கள், போஸ்டர்களில் ‘நானி’ஸ் தசரா’ என்பது பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படாமல், ‘தசரா’ என்றே இப்போது வரை விளம்பரப்படுத்தப்படுவதால் சாமி மூவிஸ் நிறுவனம் ‘தசரா’ படத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.