தமிழ்நாடு
உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்: எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

கடந்த 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில் அந்த ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் தற்போது உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டல் செய்துள்ளார்.

#image_title
சில தினங்களுக்கு முன்னர் அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனிதா பெயரிலான நினைவரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் நீட் தேர்வு ரகசியம் என்னவென்று தற்போது சொல்கிறேன். நமது மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படும் போது வரும் எதிர்ப்புக்குரலே அந்த ரகசியம். எந்தவித சமரசமும் இல்லாமல் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும். பிரதமரை சந்திக்கும் போதும் இதைத்தான் கூறினேன். இதுதான் எங்களிடம் உள்ள ரகசியம் என்றார்.
இந்நிலையில் நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் சட்டப்போராட்டம் நடத்துவது என்று கூறுகிறார். நாங்கள் சட்டப்போராட்டம் நடத்தவில்லையா. இந்த ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றார் கிண்டலாக.