தமிழ்நாடு

எண்ணூர் துறைமுகத்தில் மீண்டும் எண்ணெய் கசிவு!

Published

on

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் குழாய் உடைந்து இரண்டு டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. இது இன்றுடன் முடிவடையும் என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் எண்ணூர் துறைமுகத்துக்கு மார்ஷல் தீவிலிருந்து 25400 டன் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் இருந்து குழாய் மூலமாக கச்சா எண்ணெய் இறக்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, கச்சா எண்ணெய் செல்லும் குழாய் ஒன்றில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது.

இதனை கண்ட அதிகாரிகள் உடனே கச்சா எண்ணெய் வெளியேற்றத்தை நிறுத்தி, துறைமுக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து எண்ணை கசிவு குறித்து ஆய்வு செய்து கடலோர காவல் படைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு கடலில் படிந்த எண்ணெயை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து கடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எண்ணெய் படலத்தை அகற்றும் இந்த பணி இன்றுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 டன் எண்ணெய் கசிவு என்பது குறைவான அளவே என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த வருடம் ஜனவரி 28-ஆம் தேதி இரண்டு கப்பல்கள் விபத்துக்கு உள்ளானதில் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது. அப்போது எண்ணெய்ப் படலத்தை வாளியில் அள்ளிக்கொட்டி அகற்றியது சர்ச்சையாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version