தமிழ்நாடு
கொதித்தெழுந்த பெண்கள்: டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கினர்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் அருகில் காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்க பார் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து கடையை முற்றுகையிட்டு, டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
கொதித்தெழுந்த பெண்கள்
பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவதையும் பொருட்படுத்தாமல், டாஸ்மாக் கடை ஊழியர்கள் தொடர்ந்து மதுபானத்தை விற்றுக் கொண்டிருந்தனர். இதனால் சினம் கொண்ட பெண்கள், அங்கிருந்த காலியான பீர் பாட்டில்களை எடுத்து கடை வாசலில் போட்டு உடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள், மது விற்பனையை நிறுத்தி விட்டு, பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு அருகில் இருந்த மதுபானம் குடிக்கும் பாருக்குள் பெண்கள் நுழைந்து, அங்கிருந்த மேசை மற்றும் நாற்காலி போன்றவற்றை அடித்து நொறுக்கி பாரை சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கு குடித்து விட்டு செல்லும் ஆண்கள், அவ்வழியே செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதால், பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரை சூறையாடினர்.
புகார் அளித்தும் பயனில்லை
ஏற்கனவே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சார்பில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆகவே நாளை முதல் இந்தக் கடையைத் திறக்க கூடாது. உடனடியாக டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர். இதற்கு காவல் துறையினர் உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர