இந்தியா
டாடாவுக்கு போட்டியாக களமிறங்குகிறதா ஆகாசா ஏர்? 300 புதிய விமானங்கள் வாங்க திட்டம்..!

டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 450 புதிய விமானங்களை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகாசா விமான நிறுவனமும் 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு விமான நிறுவனமான ஆகாசா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று இலக்க புதிய விமானங்களை ஆர்டர் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதாவது இன்னும் ஒரு ஆண்டில் இந்த நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆகாச ஏர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த ஆண்டு இறுதிக்குள் நாங்கள் ஒரு மிகப்பெரிய விமான ஆர்டரை வெளியிட உள்ளோம். அதன் சரியான அளவை இப்போது வெளியிடப் போவதில்லை என்றாலும் மூன்று இலக்கங்களில் இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால் ஆகாசா ஏர் நிறுவனத்தின் வட்டாரங்களில் விசாரித்த போது 300க்கும் அதிகமான விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச அளவில் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பெங்களூரில் ஒரு விமான தொழில்நுட்பம் குறித்த அகாடமியை அமைக்க உள்ளதாகவும் வினய் துபே தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆகாசா விமான நிறுவனம் 72 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது என்பதும் அதில் 18 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்தியாவில் வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக தேவைப்படுகிறது என்றும் அதனால் அதிக விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. போயிங் அல்லது ஏர்பஸ் நிறுவனத்திற்கு தங்களுடைய ஆர்டர் இருக்கும் என்றும் கூறப்பட்டாலும் இந்த கருத்தை ஆகாசா ஏர் விமான நிறுவனம் உறுதி செய்யவில்லை.
இந்திய விமான நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 முதல் 1700 விமானங்களை ஆர்டர் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இண்டிகோ 500 விமானங்களை ஆர்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா உள்பட அனைத்து விமான நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய விமானங்களை இறக்கப் போவதை அடுத்து விமான பயணிகளுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.