சினிமா
ஐஷ்வர்யா நெகிழ்ச்சி: ‘இது எனக்கு ரஜினிகாந்த் நாள்!’

’இது எனக்கு ரஜினிகாந்த் நாள்’ என ஐஷ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். தற்போது விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடிப்பில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பைத் துவக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பூஜை போடப்பட்டு ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஹோலி பண்டிகை அன்று விழுப்பும் மாவட்டத்தில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் ஆரம்பித்து இருக்கிறார். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஐஷ்வர்யா.
‘லால் சலாம்’ படக்குழுவினருடன் ஹோலி கொண்டாடும்படியான புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஐஷ்வர்யா தெரிவித்திருப்பதாவது, ‘’லால் சலாம்’ படப்பிடிப்பின் முதல் நாளிலேயே 16 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு முடித்துவிட்டு, இந்த நாளை கொண்டாடுவது என்ற முடிவுக்கு வந்தோம்.
ஹோலி பண்டிகை எப்போதுமே என் மனதுக்கு நெருக்கமானது. கே.பாலச்சந்தர் தாத்தாவை நினைத்துக் கொள்வேன். மேலும், இது எனக்கு ‘ரஜினிகாந்த் நாள்’. பெளர்ணமியும் ஹோலியும் உற்சாகம் தரக்கூடியது. என் தந்தைக்கு ரஜினிகாந்த் என பெயர் சூட்டப்பட்ட இந்த நாளில் என் படப்பிடிப்பத் துவங்குவதில் மகிழ்ச்சி’ என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் ஐஷ்வர்யா.